Saturday 5 May 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒருப் பார்வை

, by Kuhandoss

இப்பதிவு  பயமுறுத்தும் நோக்கத்தோடு பதியபட்டதல்ல, இந்திய அரசாங்கத்தின் பெயரை கெடுப்பதும் இப்பதிவின் நோக்கமல்ல.  கூடங்குளம் அணு நிலையம் பற்றி பல வலைத்தளங்களை அலசி ஆராய்ந்து அனைவரும் படிக்க எளிதாக தொகுக்கப்பட்டுள்ளது.

"இனப்பற்று இல்லாத இனம் அழியும்"

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒருப்பார்வை:
இந்த அணு மின்நிலையம் கூடங்குளத்திற்கான திட்டம் அல்ல ஏற்கனவே பல மாநிலங்களிலிருந்து தடைசெய்யப்பெற்று தமிழ்நாட்டில் திணிக்கப்பெற்ற ஒரு திட்டம். கூடங்குளத்தில் 2 அணு உலைகள் கட்டப்பட்டு அவை போதாதென்று இன்னும் 4 அணு உலைகளையும் அங்கேயே அமைப்பதென்று முடிவெடுத்துள்ளது நம் இந்திய அரசு. இதில் இந்திய அரசின் உண்மையான தேவை மின்சார உற்பத்தி அல்ல, அதன் உபரிப் பொருளாகக் கிடைக்கும் பூளுட்டோனியம் ஆகும்.


அணுகுண்டு தயாரிப்பில் புளுட்டோனியம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி மட்டும் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.

பல விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள அணுமின்நிலையம்.
அணு உலை கட்டமைப்பு என்பது மிகவும் சிரத்தையோடு, பாதுகாப்பு வளையங்களை அமைப்பதில் சரியான முறையைப் பின்பற்றி அமைக்க வேண்டும். அப்படிப் பின்பற்றி அமைக்கப்பட்ட அணு உலைகள் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். அது செர்னோபிலாக இருக்கட்டும் அல்லது புகுஷிமா, தாய்ச்சி ஆக இருக்கட்டும். எந்த அணு உலையும் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் சான்றிதழ் கொடுக்க இயலாது.

AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது ஆனால் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.


கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. உருகிய பாறைப் பிதுங்கல்கள் நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.

பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) தல ஆய்வறிக்கையும் (’Site Evaluation Study’) அளிக்கப்படவில்லை.

அணுஉலைகளில் எவ்வளவு எரிபொருள் பயன்படுத்தப்படும்; அதிலிருந்து எவ்வளவு கதிரியக்க கழிவு வெளியாகும் என்பது போன்ற தகவல்கள்கூட இல்லை. பல்லாயிரம் டன் கதிரியக்கக் கழிவை இங்கே எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.

வெறும் 460 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணுஉலைகள் இரண்டிலும் இருந்து வெளியாகும் கழிவு நீரால் அப்பகுதி கடல் 10.3 டிகிரி வரை சூடாகிறது. இங்கே 1000 மெகாவாட் திறனுடைய 6 உலைகளால் கடல் நீர் 7 டிகிரிதான் சூடாகும் என்கிறது ஆய்வறிக்கை!

உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறது.

அணுக்கதிர் பரவும் விதமும் அதன் தாக்கமும்
அனுமின் நிலையம் இருக்கும் சுற்று வட்டாரத்தில் மட்டும்தான் பாதிக்கும் என்பதால்தானே ஒட்டுமொத்தத் தமிழகமும் வேடிக்கைப் பார்த்தது ஆனால் பாதிக்கப்படப்போவது அனைவரும்தான்.

அணு உலையில் இருந்து கசியும் கதிர்வீச்சானது காற்றின் மூலமாகவும், அணு உலையை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் நீரின் மூலமாகவும் பரவும். நீரின் மூலமாக மண்ணிலும் இறங்கும். கதிர்வீச்சினால் செடிக்கொடிகள் பாதிக்கப்படும். காற்றில் கலக்கும் கதிர் வீச்சு காற்று வீசும் திசையிலேயே பரவும். வானில் நீராவியாகப் பரவி மழை பெய்யும் போது நீர்த் துளியாக நம் மீது விழும். கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தின் வழியாகவும் பரவும்.

அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்பு:
தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.
உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும்.
நீண்டகால நோய்களாகப் புற்று நோயை உருவாக்கும்.
கதிர்வீச்சின் தாக்கத்துக்கு ஏற்ப நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் ஏற்படும்.
பெண்களுக்கு ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு
சுரப்பியைப் பாதிக்கும் நோய் ஏற்படும்.
கதிர்வீச்சானது விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் DNA தன்மையை மாற்றிவிடும் அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும்.
கதிர் வீச்சின் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கும்.
கதிரியக்கத்தின் தாக்கம் அந்த சமயத்துடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை. பல ஆண்டுகளாகத் தொடரும்.
கதிரியக்கத்தின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் நடைப்பிணமாவார்கள்.
உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
மீனவர்கள் விவசாயிகளின் வாழ்வுரிமையும்,
வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும்.
விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு தாக்கிய நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.

ஹிரோஷிமா நாகாசாகி புகைப்படங்கள் காண: CLICK HERE

பாதிப்பு ஏற்பட்டால் நம் அரசாங்கத்தை நம்பலாமா ?
போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.

நமது அரசாங்கம் அணுக்கழிவுகளை பாதுகாக்குமா ?

அணுக் கழிவுகளை ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பு திறனும், அறிவுத்திறனும் நம் அரசியல்வாதிகளுக்கு இம்மியளவும் கிடையாது.

மாற்றுத் திட்டம் ஏதேனும் மின்சாரத்திற்கு உள்ளதா:
தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம் இதனை மேலும் அதிகரித்தால் போதுமானது.

நெய்வேலியில் கிடைக்கும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியையே இந்திய அரசிடமிருந்து தமிழகம் விலைக்குப் பெறுகிறது. மற்ற இருபகுதிகளைபிற தேசங்களுக்கு இந்தியா விற்றுக் கொள்ளையடிக்கிறது. இப்படியான அறியாமையில் நம் தமிழகம் இருக்கிறது.

ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

முடிவுரை:
உலகமே அணு உலைகளை எதிர்க்கின்றன. ஆனால் நாம் அமைதியாக அல்லவா இருக்கின்றோம். அணுகுண்டு வெடித்தால் எத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்து, புல் பூண்டே பல தலைமுறைகளுக்கு முளைக்காமல் நாசமாகும் என்பதை இரோஷிமா, நாகசாகி மூலம் உலகம் அறிந்திருக்கிறது. அத்தகைய அணுகுண்டுகளைத் தயாரிக்கும் அணுஉலைகளால் ஆபத்து நிகழ்ந்தால் ஏற்படும் விளைவுகள் கற்பனைக்கு எட்டாதவை. இருப்பினும், அணுஉலைகளை தொடர்ந்து தமிழகத்தில் நிறுவ ஆட்சியாளர்கள் முடிவெடுத்து விட்டனர். இனி தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து களம் காண்பதே, மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களின் கடமையாகும். இல்லையெனில், தமிழ்ச் சமூகம் பிணக்குவியலாவதற்கு தயாராவதைத் தவிர வேறு வழியில்லை.

நன்றி: கீற்று வலைதளத்திற்கு

0 comments:

Post a Comment